யார் அந்திக்கிருஸ்து?
இன்று உலகத்தில் அதிசீக்கிரம் வரப்போகிற அந்திக்கிறிஸ்துவைக் குறித்து பல வியாக்கியானங்கள் உண்டு. ஆனால் ஆவிக்குரிய அந்திக்கிறிஸ்து யார் என்பதை அறிந்து கொள்வதில்தான் இந்த கடைசிக்காலத்தில் கிறிஸ்தவர்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று வேதாகமம் எச்சரிக்கிறது.
யோவான்
வெளிப்படுத்தின விசேஷம்தான் இயேசுகிறிஸ்து யார் என்ற பூரண வெளிப்பாட்டைக் கொடுக்கிறது. ஆதலால் தான் மூலப்பிரதியான கிரேக்க மொழியில் ‘Revelation of Jesus Christ’ இயேசுகிறிஸ்துவின் வெளிப்பாடு என்ற தலைப்பை இதற்கு கொடுத்திருக்கிறார்கள். யோவான் இயேசுவுக்கு மிகவும் பிரியமான சீஷன். இந்த பிரியமான சீஷனான யோவானைத்தான் இயேசுகிறிஸ்து பரலோகத்திற்கு ஏறிவரப்பண்ணி, ‘தான் யார்’ என்ற பரிபூரண வெளிப்பாட்டைக் கொடுத்தார் (4:1)
இயேசுகிறிஸ்து அவனுக்கு பரலோகத்தில் காட்டிய முதல் காட்சியே என்னது என்று தெரியுமா? (4:2)
ஒரே ஒரு சிங்காசனம்
(மூன்று அல்ல)

அதில் ஒருவர் வீற்றிருந்தார்
(மூவர் அல்ல)
வெளிப்படுத்தின விசேஷம் முழுவதும் வீற்றிருக்கிறவர், வீற்றிருந்தவர் என்று ஒருமையில் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது.
- நானே அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாய் இருக்கிறேன் – 22:13
- நானே இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவர் – 1:8
- நானே சர்வ வல்லமையுள்ள கர்த்தர் – 1:8
- நானே ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தர் – 17:14
- நானே சிங்காசனத்தின் மத்தியில் தேவனும் ஆட்டுக்குட்டியானவருமாய் வீற்றிருக்கிறவர்
- நானே ஜீவத்தண்ணீரை கொடுக்கிறவர் – 21:6
- நானே வானத்தில் வெளிப்பட்ட சத்தத்திற்கு உரியவர் – 1:12,13
- நானே சதாகாலமும் உயிரோடிருக்கிறவர் – 1:18
- நானே உங்கள் தேவன், நீங்கள் என் குமாரர் – 21:7
இப்போது அந்த ஒரே சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவர் தான் யார் என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்துகிறார் பாருங்கள்..
இதோ, மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார்.
ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும் – 22:7,12,20
அப்படியானால்..
ஒரே சிங்காசனத்தில், ஒருவராக வீற்றிருக்கிறவர் அதிசீக்கிரம் வரப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே. ஆமென்.
யாராக வீற்றிருக்கிறார்?
நித்திய பிதாவாக.
ஆம், காணக்கூடாத தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டு மறுரூபமாக்கப்பட்ட மகிமையின் சரீரத்தோடு உயிர்த்தெழுந்தார். அநேகருக்கு தரிசனமானார். அதே மகிமையுள்ள சரீரத்தோடு பரலோகத்திற்கு ஏறிப்போய் அந்த ஒரே சிங்காசனத்தில் எல்லோரும் காணும்படியாக நித்திய பிதாவாக இயேசு என்ற நாமத்தில் வீற்றிருக்கிறார். யோவான் அவரை காண்கிறான், அவரோடு பேசுகிறான், அவரை வர்ணிக்கிறான். இந்த இரகசியத்தை அறிந்து கொள்ளுங்கள்.
உடனே இயேசுவின் கட்டளை..
நீ போய் இவைகளை சபைகளில் சாட்சியாக அறிவி – 22:16
எவைகளை?
இயேசுவாகிய நான்தான் அல்பா ஒமெகா, ஆதி அந்தம், ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா, நித்திய பிதா என்பதை சபைகளுக்கு அறிவி.
இந்த கட்டளையை பெற்றுக்கொண்டு இறங்கி வந்த யோவான் ஆவியில் வைராக்கியம் கொண்டு..
‘இவரே (இயேசுவே) மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாய் இருக்கிறார்’ என்றான்
1 யோவான் 5:20
இவரே மெய்யான தேவன் என்றால் இயேசுவை தவிர வேறு தேவன் இருக்க முடியாது.
மேலும் யோவான் ஆவியில் வைராக்கியங்கொண்டு கடுமையான எச்சரிப்பைக் கொடுக்கிறான் பாருங்கள்..
‘தேவ ஆவியை நீங்கள் எதினாலே அறியலாம் என்றால் மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைப்பண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே’– 1 யோவான் 4:1-3.
இதை அறிக்கை செய்யாதவர்கள் வஞ்சகர்கள் என்று யோவான் இன்னும் கடினமாக எழுதுகிறான் – 2 யோவான் 1:7
அப்படியென்றால்..
1. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்து என்றால் என்ன?
2. யார் மாம்சத்தில் வந்தார் என்று வேதம் சொல்லுகிறது?
கவனியுங்கள்..
- பிதாவாகிய ஒரே தேவன் நமக்கு உண்டு – 1 கொரி 8:6
- நம்மெல்லோருக்கும் ஒரே பிதா இல்லையோ?
ஒரே தேவன் நம்மை சிருஷ்டித்ததில்லையோ? – மல்கியா 2:10 - ஆம், கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஒரே ஒரு தேவன் தான் உண்டு.
அவர் தான் நம் பிதாவாகிய தேவன் - ‘இஸ்ரவேலே, கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்’ (உபாகமம் 6:4) என்ற பிரதான கற்பனையைக் கொடுத்த நம் பிதாவாகிய ஆவியான ஒரே தேவனே நம்மை இரட்சிக்க ‘வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும் எல்லா நாமத்திற்கும் மேலான இயேசுகிறிஸ்து என்ற நாமத்தில்’ (பிலிப்பியர் 2:10) இரட்சகராக, குமாரனாக (ஏசா 9:6)ன்படி மாம்சத்தில் வந்தார் (1 தீமோ 3:16) என்பதை அறிக்கையிடுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறதாம்.
ஆனால் இதை மறுதலித்து கிபி 3ஆம் நூற்றாண்டில் ஒரு மார்க்கத்தின் மூலமாக உருவான ‘ஒரே தேவன், ஆனால் மூன்று தனிப்பட்ட நபர்களாய் இருக்கிறார்கள்’ என்ற வேதத்தில் இல்லாத விக்கிரக வழிப்பாட்டு உபதேசமாகிய திரியேக உபதேசத்தை விசுவாசித்து பிதா வேறு, குமாரன் வேறு, பரிசுத்த ஆவி வேறு என்று அறிக்கையிடுகிற எல்லா ஆவிகளும், வரும் என்று கேள்விப்படுகிற அந்திக்கிறிஸ்துவின் ஆவிகளாம்.
மறந்துவிடாதீர்கள்:
‘நம்முடைய தேவன் ‘ஒருவராய் பெரிய அதிசயங்களை செய்கிற (ஏக தேவன்)’ சங்கீதம் 36:4
இதன் அடிப்படையில்தான் யோவான் மேலும் ஒரு எச்சரிப்பைக் கொடுக்கிறான்..
‘பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து’ – (1 யோ 2:22)
அதாவது ஆவியான பிதாவாகிய ஒரே தேவனே மாம்சத்தில் குமாரனாக வந்தார் என்பதை மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்துவாம். இதுதான் அர்த்தம்.
இயேசுவே தமக்குப் பிரியமான சீஷன் யோவான் மூலம் கொடுக்கிற இந்த கடுமையான எச்சரிப்பையும் வேதத்தை அறியாமல் உண்மையான சத்தியத்தை போதிக்கிறவர்களை “ஒன்லி ஜீசஸ்” (ONLY JESUS) என்றும், இயேசு நாமக்காரர்கள் என்றும் பரியாசம் பண்ணுகிற யாவருக்கும் இயேசுவே கொடுக்கிற ஒரு சவுக்கடி எச்சரிப்பு. இப்படியிருக்க, நான் பரலோகம் போனேன், இயேசுவுக்கு மேலாக பிதாவைப் பார்த்தேன் என்பது எவ்வளவு அபத்தம். ஜாக்கிரதை!
ஆதலால், இருக்கிற கொஞ்சம் நல்ல ஊழியர்களே, அன்பு தேவபிள்ளைகளே, எந்த கௌரவத்திற்கும் இடம் கொடாமல் உங்களை தாழ்த்தி, இயேசு மாம்சத்தில் வெளிப்பட்ட பிதா என்பதை உண்மையாக விசுவாசித்து, உங்கள் பாவமன்னிப்புக்கென்று பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்ற மூன்று தன்மைகளில் தன்னை வெளிப்படுத்தின ஒரே தேவனின் மேலான நாமமாகிய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்று, (அப் 2:38) இந்த ஞானஸ்நானத்தின் மூலம் கலாத்தியர் 3:27ன்படி ‘கிறிஸ்துவின் நாமத்தை’ நெற்றியில் உடனே தரித்துக் கொள்ளுங்கள். தயவுசெய்து இப்பொழுதே அப்போஸ்தலர் 19:1-6 வசனங்களை வாசியுங்கள். இதை நீங்கள் அசட்டை பண்ணினால் நீங்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், இயேசுவே உங்களை ‘அந்திக்கிறிஸ்து’ என்று முத்திரையிட்டு அதிசீக்கிரம் வரப்போகிற ஏழு வருட அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியில் புத்தியில்லாத கன்னிகைகளைப் போல ‘உங்களை அறியேன்’ என்று சொல்லி தள்ளிவிடுவார். ஏழு வருடம் அழுகையும் பற்கடிப்புமாய் இருக்கும், புழுவாய் துடிக்க வேண்டும். ஆதலால் தப்பித்துக் கொள்ளுங்கள் என்று அன்புடன் மன்றாடுகிறேன். உங்களை மனவாட்டிகளாக மணவாளனின் இரகசிய வருகைக்கு ஆயத்தப்படுத்துவதே எங்கள் ஒரே நோக்கம். உடனே தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் பார்வைக்கு:
- “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?” (யோவான் 14:9)
- யூதர்களின் கண்களை மறைத்து உலகத்திற்கு இரட்சிப்பை ஆயத்தப்பண்ண பிதா குமாரன் என்று உவமையாக பேசுகிறேன் என்று இயேசுவே சொல்லுகிற இரகசியத்தை அறிந்து கொள்ளுங்கள் (யோவான் 16:25). “என் வாயை உவமைகளினால் திறப்பேன்” என்று இயேசு சொன்ன வார்த்தையின்படி (மத்தேயு 13:35) அனுப்பினவர், அனுப்பப்பட்டவர் என்று உவமையாக பேசுகிறார். 2 நபர்கள் அல்ல.
- [பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர்] என்று 1 யோவான் 5:7ல் அடைப்புக்குறிக்குள் காணப்படும் வசனம் மூல கிரேக்க பிரதியில் இல்லவே இல்லை. இது 16ஆம் நூற்றாண்டில் பிசாசின் தந்திரத்தால் துணிகரமாக சேர்க்கப்பட்ட வசனம்.
Google and check: ‘Johannine Comma’ - பரிசுத்த ஆவி என்பது கிறிஸ்துவின் ஆவி – ரோமர் 8:10 (ஒரு நபர் அல்ல)





