யார் கள்ளக்கிறிஸ்து?
மத்தேயு 24 ஆம் அதிகாரத்தில் சீஷர்கள் இயேசுவிடம் வந்து உமது வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன என்று கேட்டபோது, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து அவர்களை நோக்கி…
‘கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் (அநேகர்) எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள் என்றார்.’ – மத் 24:24
யார் இந்த கள்ளக்கிறிஸ்துக்கள்?
- கிறிஸ்து [Messiah – Christ] என்றால் ‘அபிஷேகம் பண்ணப்பட்டவர்’ என்று அர்த்தம்.
- அப்படியானால், கள்ளக்கிறிஸ்து என்றால்? – ‘கள்ளன் சாத்தான்’.
- இந்தக் கள்ளனாகிய சாத்தானாலே அபிஷேகம் பண்ணப்பட்ட அவனுடைய ஊழியர்கள்தான் கள்ளக்கிறிஸ்துக்கள் (2 கொரி 11:15)
இந்த கடைசிக்காலம் கள்ளக்கிறிஸ்துக்களால் மட்டும் அல்ல, அந்த கள்ளனாகிய சாத்தானாலே அபிஷேகம் பெற்ற அவனுடைய கூட்டாளிகளாகிய கள்ளத்தீர்க்கதரிசி-களாலும் (மத் 24:24), கள்ளபோதகர்களாலும் (2 பேதுரு 2:1), கள்ளஅப்போஸ்தலர்களாலும் (2 கொரி 11:13) நிரம்பியிருக்கிற காலமாய் இருக்கும். எச்சரிக்கை!
இந்த கள்ளக்கிறிஸ்துக்களின் தோற்றம் எப்படி இருக்கும்?
- ஆட்டுத்தோலைப் போர்த்தி இருப்பார்கள் – மத் 7:15
- கிறிஸ்துவின் அப்போஸ்தலர் வேஷத்தை தரித்து, அப்படியே நீதியின் ஊழியக்காரரைப் போல ஒளியின்தூதன் வேஷத்தை தரித்திருப்பார்கள் – 2 கொரி 11:14
- பால் குடிக்கிற குழந்தையைப் போல முகபாவனை கொண்டிருப்பார்கள்.
- இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல் காணப்படுவார்கள்.
- இதன் மூலம் அப்படியே ஆபிரகாம் மோசேயைப் போல காணப்படுவார்கள். அது ஆச்சரியமல்லவே என்று வேதாகமம் சொல்கிறது – 2 கொரி 11:14
ஆனால்…
இந்த கள்ளக்கிறிஸ்துக்களும் அவன் கூட்டாளிகளும் பட்சிக்கிற ஓநாய்களாய்
(மத் 7:15), பிலேயாம், யூதாஸ்காரியோத்தின் ஆவிகளால் நிரம்பி இருப்பார்கள்.
இவர்களை நீங்கள் தோற்றத்தில் கண்டுப்பிடிக்கவே முடியாது.
“அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” (மத் 7:15)
என்ற இயேசப்பாவின் வார்த்தையின்படி, கனிகளினால் மாத்திரமே அவர்களை நீங்கள் கண்டுக்கொள்ளமுடியும்.
இந்தக் கள்ளக்கிறிஸ்துக்களின் கனிகள் என்ன?
1. பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும் கண்டித்து உணர்த்துவது பரிசுத்த ஆவியின் ஊழியம். (யோவான் 16:8). ஆனால், கள்ளக்கிறிஸ்துக்களிடம் இது ஒரு துளியும் காணப்படாது.
2. மனந்திரும்பி ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் மெய்யாகவே தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் (யோவான் 3:3-5) என்ற இயேசுகிறிஸ்துவின் திட்டவட்டமான கட்டளையின்படி, ஞானஸ்நானத்தைக் குறித்து திட்டவட்டமாக போதித்து ஜனங்களை இரட்சிப்புக்கும் வருகைக்கும் ஆயத்தப்படுத்தாமல், எங்களுக்கு ஞானஸ்நானத்தை குறித்தோ எச்சரிப்பைக் குறித்தோ பேச அழைப்பு கிடையாது என்று துணிகரமாய் பொய் சொல்லி ஜனங்களை ஏமாற்றுவார்கள் (யோவான் 8:44)
3. இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம் – 1 கொரி 15:19 இந்த வார்த்தையின்படி செழிப்பு செழிப்பு என்றும், கிருபை கிருபை என்றும், செழிப்பு உபதேசத்தை மட்டுமே போதித்து, இம்மைக்காக மட்டுமே இயேசுவை நம்பவைத்து ஆத்துமாக்களை கொலை செய்வார்கள்.
4. எப்போது பார்த்தாலும் கர்த்தர் சொன்னார், கர்த்தர் சொன்னார் என்று இயேசப்பாவே இவர்களின் சட்டைப்பைக்குள் இருப்பது போல பேசுவார்கள். இது ஜனங்களை ஏமாற்ற கள்ளக்கிறிஸ்துக்களின் மிகமிகப் பெரிய தந்திரம்.
5. நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியர்கள் (லூக்கா 17:10) என்றும், விளையச்செய்கிறவர் தேவனே (1 கொரி 3:6) என்றும், எங்களால் ஆகும் என்று நினைக்க ஒரு தகுதியும் கிடையாது (2 கொரி 3:5) என்றும் வேதாகமம் சொல்கிறது.
ஆனால், இந்த வார்த்தைகளுக்கு விரோதமாக கொஞ்சமும் பயமும் தாழ்மையும் இல்லாமல், “எங்களிடத்தில் ஏராளமான வல்லமை இருக்கிறது, எங்களிடத்தில் நீங்கள் அன்பாய் இருந்தால் உங்கள் பணக்கஷ்டங்கள், போராட்டங்கள் நீங்கிவிடும், உங்கள் வியாதிகள் எல்லாம் சுகமாகிவிடும்” என்று இப்படியாக பேசி தங்களை கிறிஸ்துவை போல காட்டுவார்கள்.
6. வேதத்திற்கு விரோதமான சிரிப்பு அபிஷேகம் நிச்சயமாக கள்ளனுடைய அபிஷேகம்.
7. அவன் (சாத்தானின்) வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவன் வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள், ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள் – சங்கீதம் 55:21 .
ஆம், சாத்தான் வெண்ணையிலும், எண்ணையிலும் மிருதுவான வார்த்தைகளால் தேன் ஒழுக பேசி ஏவாளையும் ஆதாமையும் வஞ்சித்து கொலை செய்தது போல, இந்த கள்ளக்கிறிஸ்துக்களும் உங்கள் மேல் உண்மையான கரிசனை உள்ளவர்கள் போல மனதுருகி நடித்து, முடிந்தால் சிறிது கண்ணீரும் வடித்து இப்படிப்பட்ட வெண்ணையிலும் எண்ணையிலும் மிருதுவான வார்த்தைகளால் பேசி உங்கள் ஆத்துமாவை கொலை செய்வார்கள்.
8. தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயிருப்பார்கள் – 2 தீமோ 3:4 .
இந்த கள்ளக்கிறிஸ்துக்கள் தங்கள் சுகபோக வாழ்க்கைக்கு தேவையான ஆடம்பர வாகனங்கள், விமானங்கள், பங்களாக்கள், சொத்துசுகங்களுக்காக சத்தியத்தை விதைக்காமல் பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் (2 பேதுரு 2:3), காணிக்கை காணிக்கை என்று காணிக்கையை மட்டுமே விதைத்து பட்சிக்கிற ஓநாய்களாய் இருப்பார்கள்.
9. தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாய் இருப்பார்கள் – 2 தீமோ 3:5
இவர்கள் பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, உணர்வில்லாமல் இருக்கிற பெண் பிள்ளைகளை தங்களுக்கு வசப்படுத்திக்-கொள்வார்கள். இவர்களுடைய மதிகேட்டை எல்லோருக்கும் முன்பாக ஒருநாள் தேவனே வெளிச்சத்திற்கு கொண்டுவருவார் (2 தீமோ 3:5-9). ஆதலால்தான் இன்றைய ஊழியர்கள் மத்தியில் ஏராளமான பாலியல் குற்றச்சாட்டுகள்.
10. சபையில் சினிமா பாட்டு பாடுகிறவனும், நடிகர்களையும், சினிமாவையும் உதாரணமாக வைத்து ஆடுகிற, பாடுகிற, ஆராதிக்கிற, விசில் அடிக்கிற அத்தனை பேருமே சந்தேகமேயில்லாமல் கள்ளனாகிய சாத்தானால் அபிஷேகம் பெற்ற கள்ளக்கிறிஸ்துக்களும் அவன் கூட்டாளிகளுமே.
தாவீது அசுத்தமான மாடுகளை பூட்டி பரிசுத்தமான தேவனின் உடன்படிக்கை பெட்டிக்கு முன்பாக கர்த்தரை ஆராதித்தான். ஆதலால் அவனுக்கு அடி விழுந்தது (1 நாளா 15:13). அதேபோல அசுத்தமான சினிமா வாசனையைக்கொண்டு ஆடுகிற, பாடுகிற, ஆராதிக்கிற, செய்தி கொடுக்கிற அத்தனைப் பேருக்கும் அடி விழும். தயவுசெய்து இவர்களை ஊழியர்கள் என்று அழைக்காமல் நடிகர்கள் இன்னார் என்று அழையுங்கள். இது யாவருக்கும் ஒரு எச்சரிப்பின் திருஷ்டாந்தம்.
11. கடைசியாக இன்று உலகமெங்கும் ஊழியங்களில் தாறுமாறு காணப்படுகிறது.
இதற்குக்காரணம்
கர்த்தர் அதின் நடுவில் தாறுமாறுகளின் ஆவியை வரப்பண்ணினார்
ஏசாயா 19:14
ஆம், இந்தக் கடைசிக்காலத்தில் கர்த்தருடைய பிள்ளைகள் இந்த கள்ளக்கிறிஸ்துக்களை அடையாளம் கண்டு தப்பித்துக்கொள்ள கள்ளக்கிறிஸ்துக்கள் மேலும், அவன் கூட்டாளிகளின் மேலும் ஞானமுள்ள தேவன் தாறுமாறான ஆவியை வரப்பண்ணியுள்ளார்.
1. மேடைகளில் தாறுமாறான புகை, வண்ண வண்ண விளக்குகளோடு தாறுமாறான ஒளி, ஒலி அமைப்புகள்.
2. சினிமா நடிகர்களைப் போல தாறுமாறான அங்க அசைவுகளுடன், ஆட்டமும், பாடலும், நடனமும்.
3. தாறுமாறான கவர்ச்சி, மேக்கப், சிகை மற்றும் உடை அலங்காரங்கள்,
4. உபவாசத்தை காட்டிலும் நடனத்தில்தான் வல்லமை உண்டு போன்ற தாறுமாறான உபதேசங்கள்.
5. பொய் என்று நிரூபிக்கப்பட்டும், நாள்தோறும், வருஷந்தோறும் கொடுக்கிற தாறுமாறான தீர்க்கதரிசனங்கள். உலகமெங்கும் தீர்க்கதரிசி என்று பெயர் வைத்துக்கொண்டு நடக்கும் அவலங்களை குறித்து எழுத வார்த்தைகளே கிடையாது.
6. கடைசியாக பரிசுத்த ஆவியின் வல்லமை என்ற பெயரில் தாறுமாறாக கத்தி, தாறுமாறாக கைகளையும் கால்களையும் நீட்டி, வார்த்தைக்கு விரோதமாக இன்னும் விதவிதமான முறையில் ஜனங்களை தாறுமாறாக கீழே விழச்செய்வது. இதுதான் இன்றைக்கு பிரதான ஊழியமாக உலகமெங்கும் கொடிக்கட்டி பறந்து கொண்டிருக்கிறது. இது பரிசுத்த ஆவியின் வல்லமை அல்ல, தேவனால் அனுப்பப்பட்ட தாறுமாறான ஆவிகளின் கிரியை. இந்த தாறுமாறான ஆவிகளின் கிரியைகளினால், தேவனுடைய பலிபீடத்தை சர்க்கஸ் கூடாரமாக இந்த கோமாளிகள் மாற்றி விட்டார்கள்.
அன்பு தேவபிள்ளைகளே, கள்ளக்கிறிஸ்துக்கள் மற்றும் அவன் கூட்டாளிகளின் கனிகள் இதுவே. இவர்களை விட்டு விலகுங்கள் (2 தீமோ 3:5). இவர்கள் ஒருவரிடமும் சத்தியமே இருக்காது. ஆனால் சாத்தான் நல்ல பேச்சுத்திறமையை இவர்களுக்கு கொடுத்திருக்கிறான். இப்படியிருக்க, யாரையும் உடனே தேவ மனுஷன் (Man of God) என்று சொல்லாதிருங்கள். எந்தக் காரணத்தினாலும் கள்ளனாகிய சாத்தானின் அபிஷேகம் உங்களுக்குள் இறங்கிவிடாதபடிக்கு, இந்த கள்ளக்கிறிஸ்துக்களின் கைகள் மட்டும் உங்கள் தலையில் மேல் படாதபடிக்கு உங்களை மிக ஜாக்கிரதையோடு காத்துக் கொள்ளுங்கள். கடைசிக்கால ஊழியம் வெறும் எச்சரிப்பின் ஊழியமாக மட்டுமே இருக்க கர்த்தர் நியமித்திருக்கிறார் என்பதை நோவா, யோவான் ஸ்நானகன் ஊழியத்தின் மூலமாக அறிந்து தப்பித்துக்கொள்ள மிகவும் அன்புடன் உங்களை கேட்டுக் கொள்கிறேன். கடைசிகால பெரிய அற்புதங்களும் அடையாளங்களும் கள்ளக்கிறிஸ்துக்கள் மூலமாகதான் நடக்கும் என்று இயேசுவே சொல்லிவிட்டார் (மத்தேயு 24:24). இயேசு கிறிஸ்துவின் முதல் வருகைக்கு முன்பாக யோவானுக்குள் இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்களை செய்த எலியாவின் ஆவியிருந்தும், அவன் மூலமாக ஒரு சிறு அற்புதமும் அடையாளமும் கூட நடைப்பெறவில்லை (யோவான் 10:41). இது ஒரு திருஷ்டாந்தம்
ஆகாப் ராஜா காலத்தில் நானூறு கள்ளத்தீர்க்கதரிசிகள் மத்தியில் மிகாயா என்ற ஒரே ஒரு உண்மையான தீர்க்கதரிசி மட்டுமே இருந்தான். இதுவும் ஒரு திருஷ்டாந்தம்.





