யார் அந்த ஐந்து புத்தியில்லாத கன்னிகைகள்?

நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மத்தேயு 24ஆம் அதிகாரத்தில் தமது வருகைக்கான அடையாளங்களை சொல்லிவிட்டு, தொடர்ந்து 25ஆம் அதிகாரத்தில்
10 கன்னிகைகள் என்ற மிக முக்கியமான உவமையை சொல்லுகிறார்.  இந்த 10 கன்னிகைகள் என்ற உவமைதான் கடைசிக்காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்படுகிற ஒரு அன்பான மற்றும் பயங்கரமான எச்சரிப்பாகும்.

1. கன்னிகைகள் (Virgins) என்றால் யார்?
2. இவர்களிடம் காணப்பட்ட குணங்கள் யாவை?

  • மிகவும் நல்லவர்கள்
  • கெட்டுப்போகாதவர்கள்
  • பரிசுத்தமாய் வாழ்ந்தவர்கள்
  • நன்றாக ஜெபித்தவர்கள், வேதத்தை வாசித்தவர்கள்
  • ஒழுங்காக சபைக்கு சென்று ஆவியோடும் உண்மையோடும்  ஆராதித்தவர்கள்
  • தசமபாகம் முதற்கொண்டு மனப்பூர்வமாய் கொடுத்தவர்கள்
  • ஆத்தும பாரம் கொண்டு ஊழியம் செய்தவர்கள்
  • ஆவியின் கனிகளால் நிரம்பி இருந்தவர்கள்
  • பரிசுத்த ஆவியை பெற்று அந்நிய பாஷையை பேசினவர்கள்

ஆனால்..

நமக்கு பயங்கர அதிர்ச்சி உண்டாகும்படியாக, இவர்களில் ஐந்து பேரை புத்தியில்லாத கன்னிகைகள் என்று முத்தரித்து, தமது வருகையிலே “உங்களை அறியேன் என்று சொல்லி (12),  ஏழு வருடம் புழுவாய் துடிக்க வேண்டிய மகா உபத்திரவத்தில் தள்ளிவிட்டார்.

ஆனால்..

அடுத்த ஐந்து பேரை ‘புத்தியுள்ள கன்னிகைகள்’ என்று முத்தரித்து,  மணவாளனாகிய இயேசுகிறிஸ்து தன்னுடைய இரகசிய வருகையிலே எடுத்துக்கொண்டார்.  இவர்கள் ஏழு வருடம் மணவாளனோடு ஆகாயத்தில் மனமகிழ்ச்சியாய் இருப்பார்கள்.  அதன் பிறகு பூமிக்கு இயேசுவோடு இறங்கி வந்து அவருடைய ஆயிரம் வருட அரசாட்சியில் இருப்பார்கள். அதன்பின் நித்தியகாலமாக இயேசுவோடு பரலோகத்தில் இருப்பார்கள்.

இவர்கள் புத்தியுள்ள கன்னிகைகளாக முத்தரிக்கப்பட காரணம் என்ன?

இவர்கள் ஐந்து பேரிடமும் ‘பிதாவாகிய ஒரே தேவன் தான் நமக்கு உண்டு’ என்ற விசுவாசம் இருந்தது (1 கொரி 8:6, உபா 6:4).  இந்தப் பிதாவாகிய தேவன்தான் ஆதியிலே நாயகராக (Husband)  இருந்தார் என்றும் (ஏசா 54:4, எரே 31:32),  நானே உங்கள் நாயகர்
(I AM your Husband) என்ற அந்த பிதாவாகிய ஒரே தேவன்தான் இரட்சகராக நாயகராக யாவருடைய முழங்கால்களும் முடங்கும் எல்லா நாமத்திற்கும் மேலான இயேசுகிறிஸ்து என்ற நாமத்தில் மாம்சத்தில் குமாரனாக வெளிப்பட்டார் என்ற தேவபக்திக்குரிய இரகசியம் இருந்தது. (1 தீமோ 3:16). (Mystery of God – God Manifested in Flesh) 

இதன்மூலம், இயேசு இரண்டாம் நபர் அல்ல, அவர்தான் மாம்சத்தில் வெளிப்பட்ட என் நாயகராகிய (புருஷராகிய)  பிதா என்ற விசுவாசம் இருந்தது.  இந்த இயேசு என்ற நாமத்தைத் தவிர இரட்சிக்கப்படுவதற்கு வேறொரு நாமம் மனுஷருக்குள்ளே கட்டளையிடப்படவில்லை (அப்போஸ்தலர் 4:14)  என்ற விசுவாசம் இருந்தது.

இந்த விசுவாசத்தின்படி இயேசுவே தாம் கொடுத்த ஞானஸ்நான கட்டளைக்குரிய வெளிப்பாட்டை சீஷர்களுக்குக் கொடுத்து, அதன் மூலம் சபைக்கு கொடுத்த முதல் செய்தியின்படி…

‘நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள் (அப்போஸ்தலர் 2:38).

இந்தக் கட்டளையின்படி, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்று பூரண பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்று, இரட்சிப்பை பெற்றுக் கொண்டார்கள் (47).  இதன் மூலம் கலாத்தியர் 3:27ன்படி மணவாளனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தங்கள் நெற்றியில் தரித்துக்கொண்டார்கள் (Mrs. Jesus Christ).  இந்த இரகசியத்தை அறிந்து கீழ்ப்படிந்தபடியால்தான் இந்த ஐந்து பேரை ‘புத்தியுள்ள கன்னிகைகள்’ என்று மணவாளன் இயேசு அழைத்தார். 

ஆனால்..

மற்ற ஐந்து  கன்னிகைகளிடமும் புத்தியுள்ள கன்னிகைகளிடம் காணப்பட்ட மேலே சொல்லப்பட்ட விசுவாசமே காணப்படாமல் போனப்படியால்தான் அவர்களை புத்தியில்லாத கன்னிகைகள் என்று கர்த்தர் முத்தரித்தார். இவர்களுக்கு மணவாட்டியாக இருக்க வேண்டுமானால் ஒரே ஒரு புருஷன் தான் உண்டு என்ற ஞானமே இல்லாமல் போய்விட்டது.  கிறிஸ்து என்ற ஒரே புருஷர்தான் (only Husband Jesus Christ) நமக்கு உண்டு என்ற கட்டளையை அசட்டைப்பண்ணி விட்டார்கள் (2 கொரி 11:2).

காரணம், இவர்கள் கிபி 3ஆம் நூற்றாண்டில் ஒரு மார்க்கத்தின் மூலமாக உருவான
‘ஒரே தேவன், ஆனால் மூன்று தனிப்பட்ட  நபர்களாய் இருக்கிறார்கள்’, இயேசு மட்டுமே தேவன் இல்லை, அவர்கள் திரியேக தேவனாய் இருக்கிறார்கள் என்ற தவறான உபதேசத்தை விசுவாசித்தார்கள். இதை விசுவாசித்து, இயேசுவே சபைக்கு அப்போஸ்தலர் 2:38ன்படி வெளிப்பாட்டை கொடுத்தபின்பும், எந்த வல்லமையும் இரட்சிப்பும் இல்லாத பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று உவமையாக இயேசுகிறிஸ்து சொன்ன பட்டப் பெயர்களில் (Titles) ஞானஸ்நானம் பெற்றார்கள். 

சீஷர்கள் தவறு செய்துவிட்டார்கள் என்ற தவறான போதனையை நம்பினார்கள்.  யூதர்களுக்கு ஒரு ஞானஸ்நானம், புறஜாதிகளுக்கு ஒரு ஞானஸ்நானம் என்று தவறுதலாக கற்றுக்கொண்டார்கள்.     (எபேசியர் 4:5 – யூதனானாலும் புறஜாதியானானாலும் ஒரே கர்த்தர், ஒரே விசுவாசம், ஒரே ஞானஸ்நானம் தான் உண்டு). இதினிமித்தம் மணவாளனாகிய இயேசுவின் நாமத்தை தரித்து, திருமதி இயேசுகிறிஸ்துவாக முத்தரிக்கப்பட தவறி விட்டார்கள்.  இதினிமித்தமே இந்த ஐந்து பேரும்  அவ்வளவு நல்ல கிறிஸ்தவர்களாய் இருந்தும், “உங்களை அறியேன்” என்று  சொல்லி ஏழு வருட உபத்திரவம் என்ற  அக்கினியிலே இயேசு தள்ளிவிட்டார்.

(இயேசுகிறிஸ்துவாகிய) நானே (பிதாவாகிய) அவர் என்று விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களில் சாவீர்கள்.  அன்றைக்கு அவர் பிதாவை குறித்து பேசினார் என்று அவர்கள் அறியாதிருந்தார்கள் (யோவான் 8:24,27).

(இயேசுகிறிஸ்துவாகிய) நானே (பிதாவாகிய) அவர் என்று விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களில் சாவீர்கள்.  அன்றைக்கு அவர் பிதாவை குறித்து பேசினார் என்று அவர்கள் அறியாதிருந்தார்கள் (யோவான் 8:24,27).

இயேசப்பாவே இந்தக்  கடைசி காலத்திற்கென்று கொடுத்த எச்சரிப்பின்படி,
இயேசு தான் மாம்சத்தில் வெளிப்பட்ட பிதா என்று விசுவாசியாமல் போன இந்தப் பாவத்தினிமித்தம், இந்த வேதனையும் இந்த மரணமும் அவர்களுக்கு வந்தது.

‘அவர்களின் நல்ல வாழ்க்கை அவர்களை காப்பாற்றவில்லை’

அதுமட்டுமல்ல, இவர்கள் உண்மையாய் மனந்திரும்பி ஒரு முழுக்கு ஞானஸ்நானத்தை பெற்றிருந்தபடியால், அவர்களின் திரி எரியுமட்டும் கொஞ்சம் எண்ணையாகிய பரிசுத்த ஆவியை கர்த்தர் அவர்களுக்கு கொடுத்திருந்தார்.  இதை வைத்து அப்படி இப்படி என்று சில அந்நிய பாஷையை பேசுவார்கள்.  இந்த கொஞ்ச அபிஷேகத்தை கொண்டு உண்மையான சத்தியத்தை அறிந்து, இரண்டாவது முறையாக இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்று புத்தியுள்ள கன்னிகைகளாக மணவாட்டிகளாக மாறவேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்த்தார் (அப் 19:1-6).  ஆனால் அசட்டைப்பண்ணி விட்டார்கள்.

‘அவர்கள் பெற்றிருந்த அந்த கொஞ்ச அபிஷேகம் அவர்களை காப்பாற்றவில்லை ’

ஆனால் புத்தியுள்ள  கன்னிகைகளிடமோ திரி தாராளமாக  எரியவும், பாத்திரத்திலும் ஏராளமான எண்ணெய் ஆகிய பரிசுத்த ஆவி இருந்தது.  இதுதான் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்த அப்போஸ்தலர்களிடமிருந்த பூரண அபிஷேகம். இந்த பூரண அபிஷேகம் இன்று ஏராளமான ஊழியர்களிடம் கிடையாது.

ஆகையால், இந்த கடைசிக்காலத்தில் இருக்கிற சில நல்ல ஊழியர்களே, அன்பு தேவ பிள்ளைகளே, யோவான் 16:25ன்படி இயேசுகிறிஸ்து தான்தான் நித்திய பிதா என்று அவரே பகிரங்கமாக வெளிப்படுத்துகிற இந்தக் காலத்தில், சாத்தானால் மறைக்கப்பட்ட உண்மையான சத்தியங்களை  வெளியரங்கமாக்குகிறார்.  ஆதலால் உண்மையான இந்த சத்தியத்திற்கு சீக்கிரமாக கீழ்ப்படிந்து, புத்தியுள்ள கன்னிகைகளாக  முத்தரிக்கப்பட்டு, இரகசிய வருகைக்கு ஆயத்தமாக ஒப்புக்கொடுங்கள் என்று அன்புடன் மன்றாடுகிறேன்.  வரப்போகிற 7 வருட கர்த்தரின் கோபாக்கினைக்கு தப்பி கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த நேரத்திலும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்க ஆயத்தமாய் இருக்கிறோம்.  உடனே தொடர்பு கொள்ளுங்கள்.

உங்கள் பார்வைக்கு:

1.  நீங்கள் ஏற்கனவே உண்மையாக ஒரு முழுக்கு ஞானஸ்நானம் பெற்றிருந்தாலும், இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் மறுபடியும் ஒரு முழுக்கு ஞானஸ்நானம் பெறவேண்டும் என்பதற்கு அப்போஸ்தலர் 19:1-6 வரை சாட்சி. இப்படியிருக்க குழந்தை ஞானஸ்நானம் எப்படி சரியாக இருக்க முடியும்?

2.  இந்த சத்தியத்திற்கு உண்மையான திருஷ்டாந்தம் அப்போஸ்தலர் 11,12 அதிகாரங்களில் சொல்லப்பட்டுள்ள கொர்நேலியு குடும்பம்தான். இவன் குடும்பமாக எல்லாவற்றிலும் தேவனுக்கு பிரியமாய் நடந்தும் (10:2), புத்தியில்லாத கன்னிகைளைப்போல இருந்தான். இயேசப்பா இவன் மேல் அன்புகூர்ந்து பிரதியட்சமாக பேதுருவை அனுப்பி, சத்தியத்தை அறிவித்து, அவன் குடும்பம் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறவும் பூரண அபிஷேகத்தை பெற்று புத்தியுள்ள கன்னிகையாக, மணவாட்டியாக மாறவும் கிருபை செய்தார் (11:47,48). பேதுருவைப் போல இந்த கைப்பிரதியை இயேசப்பா பிரதியட்சமாக உங்கள் கரங்களில் கொடுத்திருக்கிறார். உடனே கீழ்படிந்து புத்தியுள்ள கன்னிகைகளாக மாறி, 7 வருட பயங்கர உபத்திரவத்திலிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்.

3.5 2 votes
Article Rating

Leave a Reply: Read well and be slow to speak

1 Comment
Inline Feedbacks
View all comments
Romar 15:21
Romar 15:21
2 months ago

Jesus Christ One GOD